திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 3,999 பேருக்கு நோட்டீஸ்

வேலூர்:

கடந்த 4-ந் தேதி இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச. உள்பட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலை, தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஐகோர்ட்டின் எச்சரிக்கையும் மீறி போக்குவரத்து தொழிலாளர்கள் 5-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், குடியாத்தம், ஆற்காடு, சோளிங்கர், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்பட 9 இடங்களில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து தினமும் 723 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 5 நாட்களாக வேலூரில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்தளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்காலிக டிரைவர்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வேலைக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 299 பேர்களுக்கு விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘‘பணிக்கு வராததற்கான காரணம் என்ன? பணிக்கு வராத உங்கள் மீது துறை ரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்பன உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் 6, 7-ந் தேதிகளில் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும் என்றும் தொழிலாளர்கள் அளிக்கும் பதில்களை ஆராய்ந்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட ஊழியர்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்பட 1,700 பேர் பணிக்கு வராதது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நடராஜன் தெரிவித்தார்,


Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin