*தேயிலை மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ரஷ்யா,

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த இடைகாலத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த இடைகாலத் தடை உத்தரவு வரும் 30ஆம் தேதி முதல் நீக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை தேயிலைக்கு இடைகாலத் தடை விதிக்கப்பட்டது குறித்து ஆராய்வதற்காக ரஷ்யா சென்றுள்ள குழுவினருக்கும், அந்த நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றது.

பிற்பகலில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், இலங்கை அதிகாரிகளினால் ரஷ்யாவிற்கு சில தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதாகவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி தேயிலையில் கெப்ரா எனப்படும் வண்டு வகையொன்று காணப்பட்டதை அடுத்து, இலங்கை தேயிலை மீது தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையில் இல்லாத கெப்ரா வண்டு வகை தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுக்கு, இலங்கை அதிகாரிகள் தெளிவூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைகாலத் தடை உத்தரவு தொடர்பில் முதற்கட்ட ஆராய்வு பணிகளுக்காக இலங்கையிலிருந்து குறித்த குழு நேற்றுமுன்தினம் ரஷ்யா நோக்கி பயணமாகியிருந்தது.

இதன்படி, இலங்கை தேயிலை சபையின் தலைவர், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin