எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்?: தங்க தமிழ்செல்வன்,

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச் செல்வன்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களாக உள்ள வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரசுவதி ஆகிய 5 பேர்களை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர்.

ஆனால் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான என்னையும், வெற்றிவேல், பார்த்தீபன், ரங்கசாமி ஆகிய 4 பேர்களையும் கட்சியை விட்டு நீக்க முடியாமல் மாவட்ட செயலாளர் பதவியை மட்டும் பறித்துள்ளனர். எங்களை கட்சியை விட்டு நீக்காதது ஏன்? என்று அவர்களால் விளக்கம் சொல்ல முடியுமா?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று ஐகோர்ட்டில் தீர்ப்பு வந்தால், நாங்கள் அதன் பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களாக உயிர் பெற்று விடுவோம்.

சட்டசபையில் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அதற்கு பயந்து எங்களை கட்சியை விட்டு நீக்காமல் உள்ளனர். இதுதான் உண்மை.

எங்களை நீக்குவதற்கோ, பொறுப்புகளில் இருந்து எடுப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. அ.தி. மு.க. விதிப்படி அந்த அதிகாரம் பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவுக்கு தான் உண்டு.

தற்போது இவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை கோர்ட்டை அவமதிப்பதாகும். ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை மீறி இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதால் அதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்.

தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5 அமைச்சர்கள் நேற்று பங்கேற்கவில்லை. இதற்கு இவர்கள் என்ன விளக்கம் சொன்னாலும் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியும்.

இந்த ஆட்சியின் நிர்வாகம் பிடிக்கவில்லை. ஆட்சி பிடிக்கவில்லை. மக்கள் இவர்களை ஒதுக்கி விட்டார்கள். இதனால் என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்குகிறார்கள்.

அ.தி.மு.க. எவ்வளவு பெரிய கட்சி, இந்த கட்சியின் இட்டை இலை சின்னம் இவர்களிடம் உள்ளது. தேர்தலில் 6 ஆயிரம் பணம் விளையாடி உள்ளது. அரசு எந்திரம் இவர்கள் கையில் உள்ளது. மத்திய அரசின் ‘சப்போர்ட்’ இவர்களுக்கு உள்ளது.

இதையெல்லாம் தாண்டி டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக நின்று ஜெயிக்கிறார் என்றால் மக்கள் யாரை அங்கீகரித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது.

தேர்தல் முடிவுக்கு பிறகு என்னிடம் 30 எம்.எல்.ஏ.க்கள் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். டி.டி.வி. தினகரனிடம் நிறைய எம்.எல்.ஏ.க்கள் பேசி இருக்கிறார்கள்.

கவர்னர் உரைக்காக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது. அப்போது பல்வேறு அதிசயங்கள், மாற்றங்கள் நடைபெறும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் நிலைப்பாடு எப்படி என்பதை அப்போது காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.« (Previous News)Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin