பத்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய் வழங்கப்படும்”

புதுச்சேரி : ”அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும், பத்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய் வழங்கப்படும்” என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சென்டாக் உதவித்தொகை வழங்குவதில் உள்ள தடைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள முடியாத சிகிச்சைகளை, தனியார் மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள வழங்கப்படும் 1.5 லட்சம் ரூபாய் மருத்துவ நிதி உதவி, 2 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.கல்வீடு கட்டும் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அரிசிக்கு பதில் பணம் : மாதந்தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும், 10 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ரேஷன் கார்டுக்கு 300 ரூபாய், பணமாக வங்கி மூலம் வழங்கப்படும். கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள அரிசிக்கும் சேர்த்து பணம் வழங்கப்படும்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ௩.௩௭ லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இந்த பணம் வழங்கப்படும். இதற்கு, மாதத்திற்கு 9 கோடி ரூபாய் செலவாகும். இம்மாதம் முதல், இத்திட்டம் அமலுக்கு வருகிறது. ஏனாம், மாகி பகுதி மக்கள் அரிசியை விரும்புவதால், அங்கு அரிசி வழங்கப்படும்.

சூரிய மின்சக்தி : காரைக்காலில், அரசு மின்திறல் குழுமத்தில், 660 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடுகட்ட நிதி : சுனாமி வீடு கிடைக்காமல் விடுப்பட்டவர்களுக்கு, சுனாமி வீடு அல்லது அதற்கு பதில் வீடு கட்டுவதற்கான நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இலவச லேப்-டாப் : நடப்பாண்டு பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கும், கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப், மார்ச் மாதம் வழங்கப்படும்.

கால்நடை தீவனம் : பால் உற்பத்தியை பெருக்க, கால்நடை வளர்ப்போருக்கு தீவனத்தை மானியத்தில் உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சேராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தியுள்ள நிலத்தில், புதிய தொழிற்சாலைகள் கொண்டுவருவது அல்லது அந்த இடத்தை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

தனி மாநில அந்தஸ்து : தனிமாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்;தனிமாநில அந்தஸ்தை பெறுவோம். ‘நிடி ஆயோக்’ கூட்டத்தில், மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதி தொடர்பாக வலியுறுத்துவேன்.இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

* இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்குவது வரவேற்கத்தக்கது. சில மாதம் தரமான அரிசியும், சில மாதம் தரமற்ற அரிசி வழங்குவதால், அரிசியை பலர் வாங்குவது கிடையாது. அரிசிக்கு பதில் பணமாக கொடுப்பதால், தங்களுக்கு தேவையான அரிசியை வாங்கிக்கொள்வர்.
-விஜி, லாஸ்பேட்டை

* இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுப்பது தவறு. ஏழை எளிய குடும்பத்தினர் பலர், இந்த அரிசியை எதிர் பார்க்கின்றனர். பணம் வழங்கினால், சாராயம் குடித்து வீணாக்குவாங்க. தரமான அரிசி வழங்குவது அரிசின் கடமை. அதை தவிர்த்து, பணம் வழங்குவது சரியல்ல.
-புருஷோத்தமன், ஜீவானந்தபுரம்

* இலவச அரிசியை பத்து நாட்கள் சமைத்து சாப்பிட்டோம். பணம் கொடுத்தால், ஒரே நாளில் வேறு செலவு ஆகிடும். படிப்பறிவு இல்லாத நாங்க, வங்கிக்கு போய் பணத்தை வாங்குவது கஷ்டம். பணம் வந்ததா? இல்லையா என்பதும் எங்களுக்கு தெரியாது. பழையபடி அரிசியே வழங்கலாம்.
-நாவம்மாள், பாகூர்

* இலவச அரிசி வழங் கினால் பயனுள்ளதாக இருக்கும். பணம், ஒரே நாளில் செலவாகிவிடும். பலர் மதுகுடித்து வீணாக்குவர். வசதி படைத்தவர்களுக்கு இந்த அரிசி ஏற்றதல்ல என்பதற்காக, பணம் வழங்குவது சரியல்ல. இந்த அரிசியை நம்பி பல குடும்பங்கள் உள்ளன.



(Next News) »



Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin