ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன், வரும் டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

மிழக அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க வேட்பாளர் இ. மதுசூதனன், 32 அமைச்சர்கள் புடைசூழ இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொகுதியில் பலமுறை வலம்வந்து மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். தமிழகம் முழுவதுமிருந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் வந்து முற்றுகையிட்டு வாக்கு சேகரித்தனர். ஓர் அமைச்சருக்கு 5 ஆயிரம் ஓட்டுகள் என்று ‘டார்கெட்’ வைத்து தேர்தல் வேலை செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தெருத்தெருவாக, வீடுவீடாகச் சென்று அமைச்சர்கள் வாக்குசேகரித்தனர். அதன் உச்சகட்டமாக, ‘ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுகளுக்கு ஆளும்கட்சி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது’ என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறின.

இரட்டை இலைச் சின்னமும், அ.தி.மு.க. கட்சியும் சசிகலாவை விட்டுப்போனதால் தன்னந்தனியாக இந்தத் தேர்தலை எதிர்கொண்டார் டி.டி.வி.தினகரன். கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, கடைசிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அப்போது தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனுக்கு இந்தமுறை ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்தச் சின்னத்தை தேர்தல் பிரசாரத்தின்போது தனது தலையில் தூக்கிவைத்துக் காட்டி,  ஒரேநாளில் தொகுதி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். தேர்தல் ஆணையம் மற்றும் போலீஸ் கெடுபிடி காரணமாக டி.டி.வி.தினகரன் ஆட்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்க முடியாததால், அந்தத் திட்டத்தை கைவிட்டனர். ஆனால், வீடு வீடாகச் சென்று குக்கர் படம் போட்ட பூத் சிலிப்களை கொடுத்தார்கள். எட்டு மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோது ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுத்ததை நினைவுபடுத்தினர். ‘டி.டி.வி. தினகரனை வெற்றிபெறச் செய்யுங்கள்; தேர்தல் முடிவு வந்த பிறகு உங்களைக் கவனிப்போம்’ என்ற உறுதிமொழியை மட்டும் ஒவ்வொரு வாக்காளரிடமும் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்தின் கடைசிக் கட்டத்தில் 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்பட்டது. ஆனாலும், மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரனின் யுக்திகளை எல்லாம் முறியடித்து நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தது தி.மு.க தரப்பு.            ‘சொந்தக் கட்சி ஓட்டுகள் விழுந்தாலே போதும்; வெற்றி பெறுவது உறுதி’ என்ற நம்பிக்கையோடு இருந்தார் தி.மு.க வேட்பாளர் மருதகணேஷ். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் பிரசார யுக்திகளை மிகவும் உன்னிப்பாக விசாரித்த டி.டி.வி.தினகரன் தரப்பு, வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பதை வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்வரை நிறுத்தவே இல்லை. அனைத்துப் பொதுநலச் சங்கங்களையும் போய்ப் பார்த்தார்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்து தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டார்கள். இந்நிலையில், தேர்தல் சர்வேக்களும் டி.டி.வி.தினகரனுக்குச் சாதகமாகவே இருந்தன. அதுபோலவே, வாக்கு எண்ணிக்கையின்போது முதல் ரவுண்டிலேயே முன்னிலை பெற்றார். 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்த ஓட்டுகள்கூட இப்போது நடந்த இடைத்தேர்தலில் கிடைக்கவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம். ஆளும்கட்சியையும் எதிர்க்கட்சியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார். அதாவது, தமிழகத்தில் 1980-ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு சூழ்நிலைகளில் இதுவரை 53 முறை இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 45 முறை ஆளும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களே வென்றுள்ளனர். எட்டுமுறை மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சையாகப் போட்டியிட்ட யாரும் இடைத்தேர்தல்களின் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை எல்லாம் சுக்குநூறாக்கி விட்டார் டி.டி.வி.தினகரன். தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லிக்கொண்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வெற்றி மகுடம் சூட்டி விட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே ஆளும் அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வி, ”தி.மு.க – டி.டி.வி.தினகரன் கூட்டுச் சதியால் ஏற்பட்டது” என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அ.தி.மு.க-வை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin