முதலில் அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்தும். அதன் பிறகு அந்த பணம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்:

நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றபோது அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அலைகழித்ததால் உயிர் இழந்தார்.

இதுபோல கேரளாவில் விபத்தில் சிக்கிய மேலும் சிலர் உடனடி சிகிச்சை கிடைக்காததால் உயிர் இழந்த சம்பவங்களும் நடந்தது.

இந்த சம்பவங்கள் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில ஆஸ்பத்திரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரை காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர், ஏழையா, பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

முதலில் அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்தும். அதன் பிறகு அந்த பணம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் விபத்தில் சிக்குபவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது அதற்கும் பணம் வசூலிக்கக்கூடாது என்றும் பினராயி விஜயன் கூறினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விபத்தில் சிக்குபவர்கள் உடனடி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண குடிமகன் என்றாலும் பெரிய பணக்காரர் என்றாலும் எல்லோருடைய உயிரும் விலை மதிக்க முடியாததுதான். பணம் இல்லை என்பதற்காக இனி யாரும் உயிர் இழக்கக்கூடாது என்பதற்காக கேரள அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பவர்களின் உடலை பணத்தை கட்டினால்தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம் என்று கூறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக உயிரை காக்க கேரள அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin