இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று முடிவு

புதுடில்லி:23-10-2017

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் கமிஷனில் இன்று தொடரும் இறுதி விசாரணையில், முடிவு வந்துவிடும் என்று பரபரப்பு வந்துள்ளது. தங்களுக்கே சின்னம் கிடைக்கும் என ஆளும்கட்சி தரப்பில் முழு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தினகரன் தரப்பில் இதுபற்றி எந்த பேச்சும் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரு அணிகளாகப் பிளவுபட்டது. முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால், சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. பின்னர், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிய பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணியுடன் கைகோர்த்ததால், அணிகள் பிளவு பிரச்னைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் உரிமை பிரச்னைக்கு அக்.31ம் தேதிக்குள் முடிவுகாண வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து அக்.6ம் தேதி முதல், இந்த பிரச்னையில் இறுதிவிசாரணை நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. விசாரணையை ஒத்திவைக்க தினகரன் தரப்பு விடுத்த கோரிக்கைகளை தேர்தல் கமிஷனும், ஐகோர்ட் கிளையும், சுப்ரீம்கோர்ட்டும் நிராகரித்துவிட்டன. இந்த பிரச்னையில் முடிவை அறிவிப்பதற்கான காலக்கெடுவை, நவம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தலைமைத் தேர்தல் கமிஷனில் இரட்டை இலை சின்னம் உரிமை தொடர்பான இறுதிவிசாரணை, கடந்த 6ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 2வது கட்ட விசாரணையை கடந்த 16ம் தேதி நடத்திய தேர்தல் கமிஷன், அடுத்த விசாரணை 23ம் தேதி நடக்கும் என அறிவித்தது. இந்த விசாரணையை ஒத்திவைக்க தினகரன் தரப்பில் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.

எனவே, இன்று இறுதி விசாரணை தொடர்கிறது. ஏற்கனவே நடந்த இரு விசாரணைகளிலேயே, பிரதான வாதங்கள் முடிந்திருப்பதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற முடிவு இன்று அறிவிக்கப்படலாம் என பரபரப்பு வந்துள்ளது. அதே வேளையில், ‘நவம்பர் 10ம் தேதி வரை சுப்ரீம்கோர்ட் காலஅவகாசம் வழங்கியிருப்பதால், தேர்தல் கமிஷனின் முடிவு மேலும் சில நாட்கள் தாமதமாகலாம்’ என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெறும் விசாரணைக்காக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அளித்த பேட்டிகளில், ‘‘கட்சி விதிகள் மற்றும் சட்ட விதிகள், பொதுக்குழு – செயற்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களின் பெரும்பான்மை ஆதரவு என எல்லா அம்சங்களுமே எங்களுக்கே சாதகமாக உள்ளன. இதற்கான ஆதார ஆவணங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்து, வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறோம். ஆனால், தினகரன் தரப்போ இறுதி விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் பேசி செய்கிறது. கட்சியில் ஆதரவே இல்லை, எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற கடும் நெருக்கடியால்தான் அவர்கள் இப்படி பதறிக்கொண்டிருக்கின்றனர். எனவே, எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று நுாறு சதவீத நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்தனர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், மாபா பாண்டியராஜன் ஆகியோர் அளித்த பேட்டிகளிலும் இதே நம்பிக்கையை எதிரொலித்தனர்.

இப்படி ஆளும்கட்சி தரப்பில் முழு நம்பிக்கை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தினகரன் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் ‘கப்சிப்’ தொடர்கிறது


Related News

Comments are Closed

Visit Us On FacebookVisit Us On YoutubeVisit Us On Google PlusVisit Us On TwitterVisit Us On Linkedin