50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேல்நிலை பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் அருகே ஏர்கெட்டு என்ற மலைப் பகுதியில், 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேல்நிலை பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேல்நிலை பழைய கற்காலம் என்பது, பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிப்பதாகும்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் தலைமையில், ஆய்வு மாணவர்கள் மஞ்சுநாத் மற்றும் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்வுப்பணியில், இந்தக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகுறித்தும், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கால ஆயுதங்கள் குறித்தும் பேராசிரியர் வெங்கடேஸ்வரன், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் கள ஆய்வு செய்துவருகிறோம். பெரும்பாலும், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கோடைகாலத்தைத் தவிர்த்து மற்ற காலங்களில் கள ஆய்வை மேற்கொள்வார்கள். அப்போது, பெரும்பாலான கருவிகள், புதர்கள் மற்றும் புல்வெளிகளில் மறைந்திருக்கும். அதனால், அவை கண்களுக்குப் புலப்படாது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சுட்டெரிக்கும் கோடையில் பர்கூர் ஒன்றியம் பாளையப்பள்ளியில் உள்ள மலைப்பகுதியிலும் அதைச் சுற்றிய நிலப்பகுதியிலும் கள ஆய்வு மேற்கொண்டோம்.

அதில், 5000 ஆண்டுகளுக்கு முந்தைய, அதாவது மேல்நிலை பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்களால் ஆன பெரிய கைக் கோடரிகள், சிறிய கைக்கோடரிகள், வட்டக் கருவிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், சிறைப்பான்கள், கல் கருவிகள் தட்டி எடுக்கப்பட்ட மூலக்கல், முற்றுப்பெறாத கல் ஆயுதங்கள் ஆகியவை அதிக அளவில் கிடைத்திருக்கிறது. இந்தக் கல் ஆயுதங்கள் அனைத்தும் 60 முதல் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே பரவிக்கிடந்தன. இப்பகுதி, மேல்நிலை பழைய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் கல் ஆயுதம் செய்யும் இடமாக இருந்திருக்கக்கூடும் என்று திட்டவட்டமாகக் கூற முடியும். மேலும், இந்தக் கல் ஆயுதங்கள் அனைத்தும் குவார்ட்ஸ் வகை கற்களைப் போன்றே கரடுமுரடான அமைப்பைப் பெற்றுள்ளன. கண்டெடுக்கப்பட்டுள்ள கல் ஆயுதங்கள் அனைத்தையும், கல்லூரியிலுள்ள நூலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டால், மேலும் பலவிதமான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது”; என்றார்.

Leave a Reply

Skip to toolbar