திறந்து வெளியில் மலம் கழிப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது

கடையம்: கடையம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களும் உண்டு. மேலும் வெளியூர்களில் இருந்து படித்து வரும் மாணவர்களுக்கு இங்கு பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதியும் உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் மாலை 6 மணிக்கு அருகில் உள்ள சாலையை கடந்து அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி வருவது வழக்கம். அப்போது பள்ளியிலிருந்து மாணவர்கள் தங்கள் கையில் வாளியில் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.இதுபற்றி ஒரு மாணவரிடம் கேட்ட போது நாங்கள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள விழங்காடுகளில் மலம் கழித்து விட்டு பின்னர் விளையாடி வருகிறோம் என கூறினார். இவ்வாறு இந்த மாணவர்கள் திறந்து வெளியில் மலம் கழிப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள விழங்காடுகளில் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மாணவர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதுதான் தூய்மை இந்தியாவா? என வேதனையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Skip to toolbar