10 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம்

வேலூர்: காட்பாடியில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 10 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய எல் அண்டு டி நிறுவனத்தின் கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். காட்பாடி தாராபடவேடு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 1997ம் ஆண்டு 3200 வீட்டுமனைகள் அமைக்கப்பட்டது. இந்த வீட்டுமனைகள் குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதில் 50 வீட்டுமனைகளை தேர்வு செய்து வீட்டு வசதி வாரியமே வீடுகளாக கட்டி ₹35 லட்சத்துக்கு விற்பனை செய்தது. அதில் 10 வீடுகள் தற்போது காலியாக உள்ளது. மற்ற 40 வீடுகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான கட்டிடம் அங்கு கட்டப்பட்டது.

இந்நிலையில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டிய வீடுகள் மற்றும் மனைப்பிரிவுகளை சென்னை சரக மேற்பார்வை பொறியாளர் தர் தலைமையிலான அதிகாரிகள் காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 6 கிரவுண்ட் இடத்தையும், 4 கிரவுண்ட் கட்டிட இடத்தையும் சேர்ந்து 10 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமித்து அங்கு கட்டிடம் கட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான கட்டிடத்தின் கதவை உடைத்து அதில் இருந்த பொருட்களையும் எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்றி அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க மேற்பார்வை பொறியாளர் தர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் வீட்டு வசதி பிரிவு உதவி பொறியாளர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு நேற்று ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது என்று தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 10 கிரவுண்ட் இடத்தில் சட்டவிரோதமாக எல்&டி நிறுவனத்தினர் கட்டிடம் கட்டி உள்ளனர். கடந்த 15 நாட்களில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Skip to toolbar