பள்ளியின் மேற்கூரை பழுதடைந்து ஓட்டை உடைசலாக உள்ளதால் பாலித்தின் தார்பாய் கூரையாக மாற்றி உள்ளனர்

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை பழுதடைந்து ஓட்டை உடைசலாக உள்ளதால் பாலித்தின் தார்பாய் கூரையாக மாற்றி உள்ளனர். இதனை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 3ம் தேதி திறந்தன. பள்ளி திறப்பதற்கு முன்பாக தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சீராம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் அமரும் வகுப்பறையின் மேற்கூரை ஓடுகள் போடப்பட்டு உள்ளது. இதில் ஓடுகள் பழுதடைந்து ஓட்டை உடைசலாக மாறி உள்ளது. இதனை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்காமல் தற்காலிகமாக மேற்கூரையை பாலித்தின் தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதன் உள்ளே தான் தற்போது மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கோடை காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயிலினால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி மேற்கூரையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Skip to toolbar