காவிரி கூட்டு குடிநீர் வழங்காததால் சாலை மறியல்

(கரூர் நிருபர் மணிகண்டன்)

கடந்த மூன்று மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வழங்காததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட முன்னையனுர்
பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த மூன்று மாதங்களாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் அப்பகுதி பொது மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது.

தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை ஊர் பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இன்று கரூரில் இருந்து பஞ்சப்பட்டி செல்லும் சாலை மற்றும் மாயனூரில் இருந்து பஞ்சப்பட்டி செல்லும் சாலை சந்திப்பு உள்ள முனையனூர் பேருந்து நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் அறிந்து வந்த ஊராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஆவண செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

இதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Skip to toolbar