தனிஆளாக நவநீதகிருஷ்ணனை துரத்தி, மடக்கி பிடித்து, அவரிடமிருந்து அரிவாளை கைப்பற்றி, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்

12/04/2019 திருநெல்வேலி மாநகரம்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று (11/04/2019) சாத்தூருக்கு புறப்பட்ட ஒரு பேருந்தில், சாத்தூரை சேர்ந்த இருதயராஜ் மகன் வினோத்குமார்(25) என்பவர் பயணித்து கொண்டிருந்தார். பேருந்து ரிலையன்ஸ் பல்க் அருகே வரும் போது, பெருமாள்புரம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த, கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன்(27) என்பவர் பேருந்தில் ஏறி வினோத்குமாரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டினார்.

இந்நிலையில் வினோத்குமார் உயிர் பிழைக்க பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். பின்தொடர்ந்து வந்த நவநீதகிருஷ்ணன் மறுபடியும் வெட்டுவதற்காக ஓடினார். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் (1606) திரு.அந்தோணி சாமி அவர்கள், தனது உயிரை துச்சமென நினைத்து, தனிஆளாக நவநீதகிருஷ்ணனை துரத்தி, மடக்கி பிடித்து, அவரிடமிருந்து அரிவாளை கைப்பற்றி, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலப்பாளையம் போலீசார் குற்றவாளியை கைது செய்து, காயமடைந்த வினோத்குமாரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரை பணையம் வைத்து, தனிஆளாக குற்றவாளியை விரட்டி மடக்கி பிடித்த, போக்குவரத்து தலைமை காவலர் திரு. அந்தோணிசாமியை, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாஸ்கரன் (இ.கா.ப) அவர்கள், நேரில் அழைத்து பாராட்டுகளையும், வெகுமதிகளையும் வழங்கினார்கள். இதே போல் அனைத்து காவலர்களும் கடமை உணர்வுடனும், துணிவுடனும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.

Skip to toolbar