பாரத் மாதா கீ ஜே” என்று சொன்ன இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில், மு.க.ஸ்டாலின் முன்பு “பாரத் மாதா கீ ஜே” என்று சொன்ன இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று ஈரோடு வந்திருந்தார். இதையடுத்து, நிகழ்ச்சிகள் முடிந்து, சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த வடமாநில இளைஞர் ஒருவர், “பாரத் மாதா கீ ஜே” என்று கோஷமிட்டார். இதனால், கோவை நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதைத்தொடர்ந்து, அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அந்த நபரின் பெயர் சரீஷ் ஹரி ஓம் காசியாபாத் என்று தெரியவந்தது. டெல்லியை சேர்ந்த சரீஷ், பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கலந்து கொண்டு, மீண்டும் டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்துள்ளார். மது போதையில் அவர் அவ்வாறு கோஷமிட்டது தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்பு, சோஃபியா என்ற இளம் பெண் “பாசிச பா.ஜ.க ஒழிக” என்று கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.