கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

கோவையில் பிசியோதெரபி மருத்துவத்தை பதிவு செய்ய அனுமதிக்காத தமிழ்நாடு மருத்துவமனைகள் ஒழுங்கு முறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டதிருத்தங்கள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டதிருத்தங்கள் கொண்டு வர வலியுறுத்தியும் சிவானந்தாகாலனியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் ராஜாசெல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டம் குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : தமிழகத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட பிசியோதெரபி மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தனியாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவ மையங்களை பதிவு செய்ய தமிழ்நாடு தனியார் ஒழுங்குமுறை சட்டத்தில் வழிமுறைகள் இல்லை. இது தொடர்பாக கோவை இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையை கேட்டபோது இனி தனியாக பிசியோதெரபி மருத்துவ மையங்களை இயக்க முடியாது என பதில் அளித்துள்ளார்.

அதே போல் தமிழகத்தில் ஊடுருவி வரும் போலி மருத்துவர்களை தடுக்க அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளும் மார்ச் 31&ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வாரியாக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 1000&த்திற்கும் மேற்பட்ட பிசியோதெரபி மருத்துவமையங்களை இயக்கமுடியாத நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த சட்ட வரன்முறையை உருவாக்கும் முன்பு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கங்களின் கருத்துக்களை கேட்டே விதிமுறைகளை வகுக்க வேண்டும் என பலமுறை சுகாதாரத்துறை அமைச்சர், செயலரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு எங்கள் கருத்துக்களை கேட்காமல் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 25000 பிசியோதெரபி மருத்துவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. உடனே சுகாதாரத்துறை இவ்விசயத்தில் தலையிட்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அவரைத் தொடர்ந்து சங்க செயலாளர் டாக்டர் ராஜேஸ் கண்ணா பேசும்போது : தமிழக அரசு பிசியோதெரபி மருத்துவர்களை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. மருந்தினால் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை நல்ல தீர்வை அளிக்கிறது. 10 ஆண்டுகள் ஆகியும் தமிழக பிசியோதெரபி கவு-ன்சில் உருவாக்கப்படவில்லை. அரசு உடனடியாக இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவில்லை எனில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சென்னை, தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 100&க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.