கொடிசியா 50 வது ஆண்டு பொன்விழா

கொடிசியா 50 வது ஆண்டு பொன்விழா

கவர்னர் பங்கேற்கிறார்

கோவையில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள கொடிசியாவின் பொன்விழா ஆண்டுவிழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு கோவை கோ இன்டியா ஆருத்ரா ஹாலில் நடைபெற்றது.

அப்போது கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் எனும் கொடிசியா 1969ம் ஆண்டு சிறு தொழில்களுக்கான சங்கமாக 38 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்டது. இச்சங்கத்தில் தற்போது 6604 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தொழில் வளர்ச்சிக்கும், சிறு, குறு தொழில் முனைவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கொடிசியா பெரும்பங்காற்றி வருகிறது.

தொழில் தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், தொழில் சுற்றுலா, இறக்குமதி ஏற்றுமதி ஆகியவற்றை கொடிசியா ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம்.

கொடிசியாவின் 50 ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். இதன் தொடக்க விழா அவினாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்விழாவில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜி.டி.நாயுடு அறக்கட்டளை அறங்காவலர் ஜி.டி.ராம்குமார் உட்பட பலர் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கொடிசியா செயலாளர் பி.எஸ்.தேவராஜ், துணைத்தலைவர் எம்.ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

(கோவை நிருபர் ராஜ்குமார்)