நீரிழிவு நோய் கண்காட்சி

நீரிழிவு நோயை தோற்கடிப்போம்

பிரசாரத்தை துவக்கியது டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்புமையம்

டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்புமையம் நீரிழிவு நோயை தோற்கடிப்போம் என்னும் பிரசாரத்தை கோவையில் துவக்கியது. இது குறித்த நிகழ்வானது கோவை பத்மாவதி அம்மாள் கலாசார திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் பிரசாரத்தின் தலைவர் டாக்டர் வி.மோகன், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா, துணைத்தலைவர் டாக்டர் ரஞ்சித் உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடுவோம் என்று உறுதியேற்றுக் கொண்டனர்.

கண்காட்சியில் கோவை கே.ஜி.மருத்துவமனை நிறுவனர் கே.ஜி.பக்தவத்சலம், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தலைவர் நல்லா.ஜி.பழனிசாமி, பிரிக்கால் நிறுவனத்தின் தலைவரும், சிறுதுளி அமைப்பின் நிர்வாகி அறங்காவலருமான வனிதா மோகன், ஆர்.வி.எஸ்.குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் லயன் விஜயா ஸ்ரீ டாக்டர் கே.வி.குப்புசாமி ஆகியோர் லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர் என்னும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இக்கண்காட்சி முதன்முறையாக கோவை மாநகர மக்களுக்காக நடத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றனர். நீரிழிவு நோயை எப்படி எதிர்கொள்வது, அதற்கான உணவு முறைகள் என்ன என்பது உட்பட விளக்கமும் அளிக்கப்பட்டது.

பின்பு நீண்ட நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதை வெற்றிகரமான முடித்தவர்கள் இந்தக் கண்காட்சியின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களை சிறப்பு விருந்தினர்களான பிஎஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் டாக்டர் ராமலிங்கம், பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவ துறை ஆராய்ச்சி பதிவாளர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பாராட்டினர். பின்னர் பேசிய டாக்டர் மோகன் இந்த பிரசாரம் மூலம் சரியான நடவடிக்கை மேற்கொண்டு இந்த நீரிழிவு நோயை எதிர்த்து போராடுவோம் என்பதே எங்கள் முக்கிய நோக்கமாகும். தற்போது 7 கோடியே 50 லட்சம் இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயானது நோயல்ல அது ஒரு சுகாதார சீர்கேடாகும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேசிய நிர்வாக இயக்குனர் அஞ்சனா நீரிழிவு நோயை தோற்கடிப்போம் என்னும் பிரசாரத்தின் முக்கிய நோக்கமே அதனை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது என்பதேயாகும். இது குறித்த விழிப்புணர்வை அதிகளவில் ஏற்படுத்துவதே ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில் அனைவருக்கும் யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கற்றுத் தரப்பட்டது.

Skip to toolbar