கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

(கோவை நிருபர் ராஜ்குமார்)

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்
கோவை, ஆகஸ்ட் 08 –
மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
பஸ், லாரி, டெம்போ, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நம்பி ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் பல இடங்களில் போராட்டங்களும் நடந்தது.
இதற்கிடையே, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் பல தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவையில் உள்ள பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போ, டாக்சிகள் ஓடவில்லை. தனியார் நிறுவனங்களை சேர்ந்த வாகனங்கள் மட்டும் ஓடின.
கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம் முன்பு அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் நடந்தது. கூட்டு கமிட்டி தலைவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் செல்வம், ஏ.ஐ.டி.யு.சி. கார்த்திகேயன், எல்.பி.எப். வணங்காமுடி, மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட 160 பேரை போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதுபோன்று தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத்தை சேர்ந்த சண்முகம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க காளியப்பன், பத்மநாபன் மற்றும் இருசக்கர வாகன பணிமனை ஊழியர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.