தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா ?

தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா

வலுவான போராட்டம் நடத்த சிபிஎம் முடிவு

தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சியை கண்டித்து மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த சிபிஎம் மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் காந்திபுரத்தில் உள்ள மாவட்டகுழு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இம்மாவட்டக்குழு கூட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், குடிநீரை விநியோகிப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றை பிரஞ்சு நிறுவனமான சூயிஸ் நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. தற்போது இதற்கான ஆரம்ப கட்ட வேலையை சூயிஸ் கார்ப்ரேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உயிரினங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை வணிகமயமாக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இந்நிலையில் தனியாரின் பராமரிப்பில் தண்ணீரை விடும் மாநகராட்சியின் இம்முடிவு கோவை மக்களை பெரும் துயரத்தில் தள்ளிவிடும். ஆகவே உடனடியாக கோவை மாநகராட்சி சூயிஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, தண்ணீரை வணிமயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், இதுகுறித்து முதற்கட்டமாக வரும் 28 ஆம்தேதி கோவை மாநகராட்சி ஆனையரை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளிப்பது. இதனையடுத்து மக்களை திரட்டி வலுமிக்க போராட்டத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

Skip to toolbar