ரப்பர் மரம், மிளகு, கிராம்பு உட்பட கனமழையால் 18 கோடி பயிர்கள் நாசம்

ரப்பர் மரம், மிளகு, கிராம்பு உட்பட கனமழையால் 18 கோடி பயிர்கள் நாசம்: இடுக்கி மாவட்ட விவசாயிகள் கவலை_

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் புரட்டியெடுத்த கனமழையால் 18 கோடி மதிப்புள்ள பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை புரட்டி எடுத்தது. இதில் 1739.4 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அதிகளவு விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கு அதிகமான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதேபோல 887.6 ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் உற்பத்தியில் இடுக்கி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக ரப்பர் பாலுக்காக வெட்டப்பட்ட 11,112 மரங்களும் வெட்டப்படாத 1,985 மரங்களும் ஒடிந்து விழுந்தன. இதனால் ரப்பர் உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மேலும், பலத்த காற்றால் இடுக்கி மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மிளகுச்செடிகள் நாசமானது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்பி செடிகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மூணாறு அருகே மறையூர், காந்தலூர் பகுதிகளில் 53 ஹெக்டேரில் பயிரிட்ட கரும்பு, 30 ஹெக்டேரில் பயிரிட்ட காய்கறிகள், 1.8 ஹெக்டேர் சீனி கிழங்கு போன்றவையும் பெரும் சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட பல இடங்களில் விவசாயத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `‘வாழை, மிளகு, கிராம்பு போன்ற விவசாயத்திற்கு பொருட்களுக்கு மிதமான மழை அவசியமானதாகும். ஆனால் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். சுமார், 18 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு எங்களது விவசாயத்தைக் காக்க கேரள அரசு உதவ நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்,’’’ என்றார்.

Skip to toolbar