உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, தனது காரில் தடை செய்யப்பட்ட 251 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக கூறி போதைப்பொருள் கடத்தல்

திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, தனது காரில் தடை செய்யப்பட்ட 251 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக கூறி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி. இவருக்கு 33 வயதுடைய அருண்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏபிஆர்ஓவாக அதாவது மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10 நாட்களாக அருண்குமார் விடுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அருண்குமார் வீட்டிலிருந்தபோது, சென்னையிலிருந்து வந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவரது காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரது காரில் தடை செய்யப்பட்ட 251 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அருண்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அருண்குமாருடன், ரவி 43, ஸ்ரீராம் 30 ஆகியோரையும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சென்னை அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்ததாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. எனினும் தொடர் விசாரணையில் அருண்குமார் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது விரைவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Skip to toolbar