1500 குடும்பங்கள் வாழ்வதற்கான வழி எங்கே?

(கோவை ராஜ்குமார் நிருபர்)

அனைத்து கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கம்
கோவை, ஜுன்.12-
உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது : கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சரியான வசதிகள் செய்யப்படவில்லை. ஒப்பணக்காரவீதி முதல் உக்கடம், ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் முதல் மக்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு கடந்த 2013 ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என தெரிவித்து அதற்கான திட்டமும் வெளியிட்டார். ஆனால் அது தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இதனால் ஏகப்பட்ட இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது காந்திபுரம் மேம்பாலம் போல் பயனற்றதாகிப் போய்விடும். உக்கடம் மேம்பாலத்திற்கு கீழ் துப்புரவு பணியாளர் உள்ளடக்கிய சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களை அப்புறப்படுத்த அரசாங்கம் நெருக்கடி கொடுத்து வருகிறது.
மேலும் சலவைத் தொழிலாளர்களின் சுமார் 150 குடும்பங்கள் அப்புறப்படுத்தும் அபாயமும் இருக்கிறது. இவர்களுக்கு தங்கள் பகுதியிலேயே தொழிலை மாற்றி த் தரவேண்டும். குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டித் தரவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18.6.18 அன்று உக்கடம் பகுதியில் உண்ணாநிலை அறப்போராட்டமும், கையெழுத்து இயக்கமும் நடைபெறும். இதில் அனைத்து கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் பங்கேற்க உள்ளார்கள்.
பேட்டியின் போது தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், எஸ்.டி.பி.ஐ.தொழிற்சங்க தலைவர் ரகூப்நிஸ்தார், வெல்பேர் பார்ட்டி ஆப் இண்டியா அப்துல் ரஹ்மான், பியுசிஎல் மாநில துணைச் செயலாளர் பொன் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.