பிரதமர் இல்லத்தில் மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு – தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை

image

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை, பிரதமர் நரேந்திர மோடியை அவரது ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் வைத்து சந்தித்தார். இதற்காக சென்னையிலிருந்து இன்று காலை தனி விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா தனி விமானத்தில் இன்று காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

அவரது விமானம் மதியம் 1.30 மணியளவில் டெல்லி சென்று சேர்ந்தது.விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அதிமுக எம்.பிக்கள், ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா கார் வெளியே வந்தபோது, அதன்மீது பூ தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.

டெல்லியில் தமிழ் நாடு இல்லத்தில் ஓய்வெடுத்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து கார் மூலம், மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்றார் ஜெயலலிதா. பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை நரேந்திர மோடி வரவேற்றார். இதன்பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினைகள், கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, மின்சார திட்டங்கள், ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது, கூடுதல் நிதி உதவி கோருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜெயலலிதா, மோடியிடம் ஆலோசித்து வருகிறார்.

Skip to toolbar