Main Menu

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கோரும் வழக்கு: பிப்.13-க்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யம் கோரும் வழக்குகளை பிப்ரவரி 13-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று அதிமுகவிலிருந்து வெளியேறிய ஓ.பன்னிர்செல்வம் அணியினரும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதை அவர் நிராகரித்து விட்டார். அப்போது ஏற்பட்ட அமளியில் சபையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி, திமுக உறுப்பினர்களை சபையை விட்டு வெளியேற்றிய பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதிமுக பிளவுபட்டிருந்த நிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறி முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். அருண்குமார் எம்.எல்.ஏ. ஊரில் இல்லாததால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை கேட்டு டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், என்.ஜி. பார்த்திபன், எம்.ரெங்கசாமி அகியோர் கடந்த மார்ச் 20-ம் தேதி சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.

இதனிடையே அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக மார்ச் மாதம் தங்கள் புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, அதன் பின்னர் தங்களுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் கொடுத்த புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சபாநாயகருக்கு எதிராக தினகரன் ஆதரவு தகுதிநிக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், என்.ஜி.பார்த்திபன், எம்.ரெங்கசாமி ஆகியோர்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்த உடனேயே உறுப்பினர் தகுதியை இழந்துவிட்ட ஓ.பன்னிர்செல்வம், மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர்களாக பதவி வகிக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் தன்னிலை விளக்கமளிக்க கோரும் கோ-வாரண்டோ மனுவை திமுக எம்எல்ஏவான கு.பிச்சாண்டி தொடர்ந்தார்.

இருவரும் அமைச்சர்களாக தொடர்வது சட்டவிரோதமானது என்பதால், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் நீதிமன்றம் தலையிட்டு ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் வைத்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜரானார்கள்.

கபில் சிபில் தனது வாதத்தில், “அரசு கொறடா உத்தரவை மீறி பிப்ரவரி 18 நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ். அணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என எங்களுக்கும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்திலும் முழுமையாக தெரிவிக்கவில்லை.

ஆகஸ்ட் 22 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்த உடனேயே, ஆகஸ்ட் 24ஆம் தேதியே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் மார்ச் 20-ல் ஓபிஎஸ். அணியினர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து 9 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. தற்போது இயங்கிவரும் அரசு சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. அதனால் தான் அதை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.” என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தில்: “சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து வேண்டுமானால் வழக்கு தொடரலாமே தவிர, புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரமுடியாது. அதனடிப்படையில் இந்த வழக்கே விசாரணைக்கு உகந்ததல்ல என நாங்கள் எதிர்க்கிறோம். நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது.

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பது குறித்து ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. வழக்கு குறித்து விரிவான பதில்மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் அமர்வு, ஓ.பன்னிர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் பதில் மனுவை பிப்ரவரி 5-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கடுத்த ஒரு வாரத்தில் மனுதாரர்கள் விளக்க மனு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 13-க்கு ஒத்திவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.Comments are Closed