Main Menu

நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?”: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்

சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதன் பொன்விழாவைக் கொண்டாடப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது.

1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, “இந்த அவையிலே இன்றைய தினம் ” உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்தத் தீர்மானம் காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வருகிறது. இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றியல்ல. தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. மேலும் இப்படி பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. நாம் இப்படி பெயர் மாற்றத்திற்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள்” என்று குறிப்பிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்படத்தின் காப்புரிமைTOPICAL PRESS AGENCY/HULTON ARCHIVE/GETTY IMAGES
Image captionமெட்ராஸ் உயர் நீதிமன்றம்

அதற்குப் பின் அவர் ‘தமிழ்நாடு’ என்று மூன்று முறை குறிப்பிட்டதும் உறுப்பினர்கள் வாழ்க என்று மும்முறை வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

தமிழ் பேசும் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் தற்போது மிகப் பொருத்தமானதாக ஒலிக்கும் இந்த காலகட்டத்தில், இந்தப் பெயருக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அது ஏற்கப்படாத காலகட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கும்.

“மெட்ராஸ் என்ற பெயரை, தமிழ்நாடு என்று மாற்றியது மிக முக்கியமானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காகச் சூட்டப்பட்ட பெயர்களையும் எல்லைகளையும் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்வாக எல்லைகளையும் தாண்டிய அடையாளம் நமக்கு இருக்கிறது. அதைத் தான் இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி. செந்தில்நாதன்.

மெரீனா கடற்கரைபடத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES
Image captionமெரீனா கடற்கரை

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா முழுவதுமே இன அடிப்படையிலும் மத அடிப்படையிலுமே தனி நாடுகளாக உருப்பெற்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மொழி, இன அடிப்படையிலான பெயர்களையே தங்களுக்குச் சூட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் செந்தில்நாதன்.

“இதை இனவெறியாகவோ, தனித் தமிழ் வெறியாகவோ பார்க்க வேண்டியதில்லை. மெட்ராஸ் மாகாணத்தோடு இணைந்திருந்த பிற மொழி பேசும் பகுதிகள் பிரிந்துசென்றுவிட்ட நிலையில், எஞ்சியிருந்த பகுதிகள் தமிழ் பேசும் பகுதிகளாக இருந்த நிலையில் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்பது நியாயமான கோரிக்கைதான்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

ஆனால், நாடு என்று வருவதாலேயே இங்கு பலர் அதை தனி நாடு என்று புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாடு எனப் பெயர் இருந்தாலும் மத்திய அரசால்தான் 60 சதவீத நிர்வாகம் நடைபெறுகிறது; இதைப் புரிந்துகொள்ளாமல் பிற மொழி பேசுபவர்கள் குறித்த வெறுப்பு இங்கு விதைக்கப்படுகிறது என்கிறார் ரவிக்குமார்.

மெட்ராஸ் துறைமுகம்படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES
Image captionமெட்ராஸ் துறைமுகம்

தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது, சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றக் கோரிக்கை எழும்போதெல்லாம் அதனை தொடர்ந்து எதிர்த்துவந்த காங்கிரஸ் கட்சி 1930களிலேயே தமிழக காங்கிரஸ் கட்சி என்ற பெயரைச் சூட்டிவிட்டது.

1956ல் மொழிவாரி மாநிலங்கள் அறிவிக்கப்பட்டு, ஆந்திரா பிரிந்துசென்றுவிட்ட நிலையில் இந்தக் கோரிக்கை மிகத் தீவிரமடைந்தது. மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரலிங்க நாடார் 1956 ஜூலை 27ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார். பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் தனது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார். 76 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, அக்டோபர் 13ஆம் தேதியன்று அவரது உயிர் பிரிந்தது.

தமிழரசுக் கட்சியின் ம.பொ. சிவஞானம் போன்றவர்கள் நீண்டகாலமாக பெயர் மாற்றத்திற்காகப் போராடிவந்த நிலையில், சங்கரலிங்க நாடாரின் மறைவு இந்தப் போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது.

1957ல் தி.மு.க. முதன் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தபோதே, அதனுடைய முதல் தீர்மானம் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. 1957 மே 7ஆம் தேதியன்று தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 42 பேர் ஆதரவாகவும் 127 பேர் எதிராகவும் வாக்களிக்க, தீர்மானம் தோல்வியடைந்தது.

புனித ஜார்ஜ் மற்றும் மெட்ராஸ் வரைபடம்படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES
Image captionபுனித ஜார்ஜ் மற்றும் மெட்ராஸ் வரைபடம்

1961 ஜனவரியில் சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி. சின்னத்துரை மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்தபோது, இது தொடர்பான விவாதத்தை முதலமைச்சர் பிப்ரவரி வரை ஒத்திவைத்தார். ஆனால், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் புறக்கணித்ததையடுத்து முதலமைச்சர் காமராஜர், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என நிர்வாகக் கடிதங்களில் குறிப்பிடுவதற்கு ஒப்புக்கொண்டது.

1961ல் ஒன்றுபட்ட மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவையின் உறுப்பினர் பூபேஷ் குப்தா மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டக் கோரும் மசோதா ஒன்றைக் கொண்டுவந்தார். இது குறித்து நீண்ட விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது.

”இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த நகரம் சென்னை”

1964ல் தி.மு.க. உறுப்பினர் ராம. அரங்கண்ணல் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், அது தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய அமைச்சர் வெங்கட்ராமன், தமிழ்நாடு என்று சொன்னால் வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும் அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தானே சர்வதேச அரங்கத்தில் கேட்கும்போது பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அசம்பிளி கட்டடம்படத்தின் காப்புரிமைFOX PHOTOS/GETTY IMAGES
Image captionஅசம்பிளி கட்டடம்

அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸைப் பொறுத்தவரை, இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்பதில் பெரும் தயக்கம் இருந்தது. தமிழ்நாடு என்ற வார்த்தையில் உள்ள நாடு என்பது தனி நாட்டைக் குறிக்குமோ என்ற அச்சம் இருந்தது. “தமிழ்நாடு என்பது நமது நாடா அல்லது இந்தியா நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என்று சொல்வது” என முதலமைச்சர் பக்தவத்சலம் கேள்வியெழுப்பினார்.

தவிர, தமிழரல்லாதவர்கள் நிலை குறித்தும் அச்சங்கள் இருந்தன. இதனாலேயே காங்கிரஸ் இந்தக் கோரிக்கையில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. பெயரை மாற்றாமல் இருப்பதற்கே மக்களின் ஆதரவு இருப்பதாகவும் காங்கிரஸ் நம்பியது.

ஆனால், 1967ல் தி.மு.க. பெற்ற வெற்றி எல்லாவற்றையும் மாற்றியது. முதலாவதாக, தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பெயர்ப் பலகை, 1967 ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழக அரசு என்று மாறியது.

அதற்குப் பின் 1967 ஜூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1969 ஜனவரி 14ல் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆக அதிகாரபூர்வமாக மாறியது.Comments are Closed