ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவினரால் 40,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:

ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவினரால் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
ஆர்.கே நகர் தொகுதியில் இடைத் தேர்தலை நிறுத்திவைப்பதற்கு ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததுதான் காரணம். இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை பொறுப்பாக செய்து முடித்தவர்கள் பட்டியலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் இந்த விகாரத்தில் உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.

இதில் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை என்பது வேதனையானது. ஆகையால் பணப்பட்டுவாடா புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்துவிட்டு பின்னரே ஆர்.கே. நகரில் தேர்தலை நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுகவினரால் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆதாரங்களை அளித்துள்ளோம். இதனடிப்படையில் போலி வாக்காளர்களை உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாநகராட்சி ஊழியர் விளக்கம்

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்களிடம் டெங்கு காய்ச்சல் பற்றி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார்.

மாநகராட்சி ஊழியர்களிடம் டெங்கு கொசுக்கள் பெருகும் விதம் குறித்தும் கேட்டறிந்தார் மு.க. ஸ்டாலின்.