ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

புதுடில்லி:

ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

பிரதமர் ஷின்சோ அபே கடந்த மாதம் 28ஆம் தேதி பாராளுமன்றத்தை (பிரதிநிதிகள் சபை) கலைத்து உத்தரவிட்டார். இதனால் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதில் 312 இடங்களில் ஷின்சோ அபே கட்சி வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து ஷின்சோ அபே பேசினார்.

”ஜப்பான் மக்களிடையே அமைதி மற்றும் செழிப்பை நிலைநாட்ட பாடுபடுவேன். வடகொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர தீர்க்கமான மற்றும் வலுவான ராஜதந்திர முடிவுகளை எடுக்கப்படும். வடகொரியா தனது கொள்கையில் இருந்து மாற, மேலும் அழுத்தங்கள் கொடுக்கப்படும். நாட்டு மக்களின் இந்த வலுவான ஆதரவுக்கு என் நன்றிகள்” என்று கூறினார்.

ஜப்பான் பிரதமராக சின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.”எனது இனிய நண்பர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த ஆவலாக காத்திருக்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

கடந்த 3 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் பலமுறை சந்தித்துள்ளனர்.

சமீபத்தில் ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.