Main Menu

மாட்டின் பெயரால் அப்பாவி மக்களை அடித்துக் கொல்லும் கும்பல்

மாட்டின் பெயரால் அப்பாவி மக்களை அடித்துக் கொல்லும் கும்பல் கொலைகளுக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் மக்கள் பரப்புரையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது. ‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே!’ என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் மக்கள் பேரணி இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அப்துல் சத்தார்,  மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஃபாரூக், அபுதாஹிர், ஏ.கே.கரீம், முஜிபுர் ரஹ்மான், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அ.ச.உமர் ஃபரூக், விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவி நஜ்மா பேகம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார்.சரவணன் ஆகியோர் பசுவின் பெயரால் நடைபெறும் அப்பாவிகள் படுகொலைக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பேசுகையில்;
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல் தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பசுவின் பெயரால் தங்களை பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொள்பவர்கள் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரால் மதவெறியர்கள் உருவாக்கிய இந்த பயங்கரவாதம் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள், தலித்களின் குடும்பங்களை நாசமாக்கிவிட்டன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக ஆதரவுடன் நடத்தப்பட்ட அப்பாவிகள் மீதான கொடுங்கொலை தாக்குதலுக்கு இதுவரை 30க்கும் அதிகமான அப்பாவிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் இப்படி அப்பாவி மக்கள் அடித்து படுகொலை செய்யப்படுவது குறித்து புகார்கள் கிளம்பினாலும், மத்தியில் ஆளும் பாஜக அரசோ அல்லது மாநிலங்களில் ஆளும் அரசோ அதை கண்டுகொள்வதில்லை. அந்த தாக்குதலை தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை.
மதவெறி சக்திகளால் வழி நடத்தப்படும் இந்த வெறியர்கள், கால்நடை வியாபாரிகள், மாட்டிறைச்சியை விற்போர் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்வோர், அதனை உண்போர் ஆகியோரை அடித்துக்கொன்று அவர்களாகவே தண்டனை வழங்குகிறார்கள். பல சந்தர்பங்களில் அவர்களின் குறி முஸ்லிம்கள் தான். இந்த பயங்கரம் குறித்து பிரதமர் விடுத்த உப்பு சப்பற்ற அறிக்கை, இந்த படுபாதகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கும் விதத்திலோ, முஸ்லிம்களை பாதுகாக்கும் விதத்திலோ அமையவில்லை.
வடமாநிலங்களில் நிகழ்த்தப்படுவது போன்று தமிழகத்திலும் விவசாயத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் வாகனங்களில் மாடுகளை ஏற்றிச் செல்பவர்களை வழிமறித்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்புகள் வன்முறைகளை கட்டவிழ்த்து, சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடையும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாட்டின் பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் 97 சதவீத நிகழ்வுகள் 2014 மே மாதம் பிரதமர் மோடி பதவி ஏற்றக்கொண்டதற்கு பிறகு நடந்துள்ளன. இந்த வன்முறைத் தாக்குதல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 21 சதவீதம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. பசு தொடர்பாக நடந்த வன்முறைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு (2017) 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
கும்பலாக சேர்ந்து கொண்டு அடித்துக் கொல்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, தற்போதைய சட்டத்தில் போதிய ஷரத்துக்கள் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தில் (இந்தியன் பீனல் கோடு) சட்ட விரோதமாகக் கூடுதல், கலவரம் விளைவித்தல் மற்றும் கொலை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிராக வழக்குப் பதிவதற்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் கும்பலாக சேர்ந்து கொண்டு அடித்துக் கொல்பவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய இந்திய குற்ற நடைமுறைச் சட்டத்தில் தற்போதைய சட்டத்தில் போதிய இடமில்லை. கும்பலாகச் சேர்ந்து கொண்டு அடித்துக் கொல்பவர்களுக்கு, தாங்கள் சட்டத்தின் பிடியின் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற தைரிய மனப்பான்மை தான், அந்தகைய குற்றங்கள் தொடர்கதையாக செய்ய பெரும் காரணமாகும். இந்த விதமான சட்டப்பாதுகாப்பு  தான் கும்பல் கொலை வெறிக்கு ஊக்கமும் உரமும் கொடுத்து வருகிறது.
தாத்ரியில் முகமது அஹ்லாக்கை கும்பல் அடித்துக் கொன்ற கொலைக் குற்றமாகட்டும், குஜராத் உனாவில் தலித்கள் தாக்கப்பட்ட குற்றமாகட்டும், ராஜஸ்தான் ஆல்வாரில் பெஹ்லுகானை கொலைச் செய்த குற்றமாகட்டும், ஹரியானவில் ஹாஃபிழ் ஜூனைதை ஓடும் ரயிலில் அடித்துக் கொன்ற நிகழ்வாகட்டும், ஆளும் வர்க்கம் எடுத்த எதிர் நடவடிக்கை மிகவும் குறைவாகும். சட்டமும் அவர்களுக்கு துணை போகிறது. இதன் காரணமாகவே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் மக்கள் பரப்புரை இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நாடெங்கும் கையிலெடுத்து போராடி வருகிறது.
முஸ்லிம்கள் மற்றும் தலித்களைப் பொறுத்தவரை அரசியல், நீதி மற்றும் சமூக தீர்வுகளுக்கான கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் இதனால் பாதிக்கப் போவது முஸ்லிம்களும், தலித்களும் மட்டுமல்ல, இதன் விளைவுகளை நாட்டின் குடிமக்கள் அனைவருமே எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த போக்கு தேசத்தின் நலனுக்கு மிக ஆபத்தானது. ஆகவே, பாசிச சங்க்பரிவார்களின் வன்முறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், சிறுபான்மை அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
இந்த பேரணியில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு அடித்துக் கொல்லும் கும்பல் கொலைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
 *ஏ.கே.கரீம்


Comments are Closed