கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள் பரிதவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனை வெற்றி பெற வைப்பதற்காக, கடன் வாங்கி செலவழித்த அமைச்சர்கள், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், கடன் தொகையை எண்ணி கலக்கத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., – சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை வாரி இறைத்தனர்.

பெரும் தொகை :
அதற்காக, ஒவ்வொரு அமைச்சரும், குறிப்பிட்ட தொகை தர வேண்டும் என, தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் கோடிக்கணக்கில் பணம் வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்தவர்கள், சிரமம் இன்றி, கேட்ட தொகையை கொடுத்து விட்டனர். புதிதாக அமைச்சரானவர்களோ, கடன் வாங்கி தந்துள்ளனர். மேலும்,தொகுதியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், கட்சி நிர்வாகிகளுக்கும், பிரசாரத்திற்கும் பெரும் தொகையை செலவழித் துள்ளனர். அனைத்து அமைச்சர்களும், தங்கள் பங்கு தொகையை, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத் துள்ளனர். அவர், வாக்காளர்களின் எண்ணிக்கைக் கேற்ப, பணத்தை பிரித்து கொடுத்துள்ளார். வருமான வரித்துறை : ஒரு அமைச்சர், 18 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார். அதில், பெரும் தொகையை, கடனாக பெற்றுள்ளார்.நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின் அமைச்சரானவர்; சமீபத்தில், போதையில் உளறி கொட்டியவர் அவர். இதுதவிர, பெண் அமைச்சர் ஒருவர் உட்பட, மேலும் பலரும் கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளனர். தேர்தலில், தினகரன் வெற்றி பெற்றால், அவர் முதல்வராவார். நான்கு ஆண்டுகள் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளனர்.  தற்போது, தேர்தல் நிறுத்தப்பட்டதாலும், வருமான வரித் துறை நெருக்கடியாலும், கடனை திரும்ப செலுத்த முடியுமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.அதேபோல, அமைச்சர் களை நம்பி கடன் கொடுத்தவர்களும், பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.

Skip to toolbar