டாஸ்மாக்’ எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வை சிறைபிடித்த மக்கள்

பல்லடம்: திருப்பூர் அருகே, ‘டாஸ்மாக்’ கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், பலர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், சோமனுார் காரணம்பேட்டை சாலையில் இருந்த, ‘டாஸ்மாக்’ கடையை மூடிய அதிகாரிகள், 1.5 கி.மீ., தள்ளி, அய்யன்கோவில் சாலையில் நேற்று திறக்க முயன்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை, 10:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், சாமளாபுரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து தடைபட்டது. பல்லடம் தாசில்தார் சாந்தி, டி.எஸ்.பி., மனோகரன் ஆகியோர் பேச்சு நடத்தினர். கலைய மறுத்த பெண்கள், ‘மதுக்கடையை திறக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்’ என்றனர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போராட்டம் தொடர்ந்த நிலையில், மதியம், 12:00 மணியளவில், திட்டமிட்டபடி, ‘டாஸ்மாக்’ கடை திறக்கப்பட்டது.
* எம்.எல்.ஏ., சிறைபிடிப்பு : அப்போது, அவ்வழியாக குடும்பத்தினருடன் காரில் வந்த சூலுார், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கனகராஜை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவரோ, ”முதல்வரிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார். ஏற்க மறுத்த பெண்கள், ‘கடையை இன்றே திறக்கக் கூடாது’ என, கோஷமிட்டனர். நகர முடியாமல் தவித்த எம்.எல்.ஏ., ”மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். மூடா விட்டால் உங்களுடன் இணைந்து போராடுவேன்; எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்வேன்,” என்றார்.இதை ஏற்க மறுத்த மக்கள், ‘தொகுதிக்காக எதையும் செய்யாத உங்களை நம்ப தயாராக இல்லை’ எனக்கூறி, அவரை சிறைபிடித்தனர்; அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
* போலீஸ் தடியடி : போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதிரடிப்படை போலீசார் வந்தனர். திருப்பூர், எஸ்.பி., உமா, போனில் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, திருப்பூர் தலைமையிட, ஏ.டி.எஸ்.பி., பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், திடீரென, ‘பைபர் லத்தி’களுடன் தடியடி நடத்தினர்.இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண்களும், பெண்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அருகிலிருந்த கடை, வீடுகளில் புகுந்தவர்களை போலீசார் விரட்டி சென்று சரமாரியாக தாக்கினர். இதில், பலரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பதிலுக்கு சிலர், போலீசார் மீது கற்களை வீசினர். இச்சம்பவத்தால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது. ‘எல்லாம்’ முடிந்த பின், எஸ்.பி., உமா, சம்பவ இடத்துக்கு வந்தார். போராட்டம் நடத்திய மக்களை, கண்மூடித்தனமாக தாக்கியதாக போலீசார் மீது குற்றஞ்சாட்டி, சமூக ஆர்வலர்கள் சிலர், அப்பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோவில் முன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று மாலை துவக்கினர். சாமளாபுரம் பகுதியில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துமீறிய அதிகாரி : போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி நடத்தியதை, பெண் ஒருவர் கண்டித்தார். இதனால், ஆத்திரம் தலைக்கேறிய, திருப்பூர் தலைமையிட, ஏ.டி.எஸ்.பி., பாண்டியராஜன், அவரை பெண் என்றும் பாராமல், வலது கையால் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். நிலை குலைந்து விழுந்த அந்த பெண்ணை, அருகில் இருந்த பெண்கள் தாங்கி அழைத்து சென்றனர். இக்காட்சியை வீடியோ எடுத்த சிலர், ‘வாட்ஸ் ஆப்’பில் பரவ விட்டனர். அத்துமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. இதுதொடர்பான, வீடியோ பதிவை, www.dinamalar.com இணையதளத்தில் பார்க்கலாம்.

Skip to toolbar