தகுதி பற்றி பேச வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் கோரிக்கை

jeyakumar__stalin_2964218f
திமுக ஆட்சியில் நடந்ததை கே.பி.பி. சாமி பேசும்போது, ‘இதையெல்லாம் சொல்ல உங்களுக்கோ, உங்கள் தலைவருக்கோ எந்த தகுதியும் இல்லை’ என்று மீன்வளத்துறை அமைச்சர் சொல்வது முறையல்ல. இதுபோன்ற வார்த்தைகளை அவர் தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இன்று சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் மீது மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அதில் ஸ்டாலின் பேசியதாவது:

”எங்கள் கட்சியின் உறுப்பினர் கே.பி.பி.சாமி தன்னுடைய கருத்துகளை சொல்லிக் கொண்டு இருந்தார். திமுக ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அதிலும் குறிப்பாக அவர் மீன்வளத்துறையின் அமைச்சராக இருந்த காரணத்தால், எங்களது ஆட்சியில் நடைபெற்ற, வரலாற்றில் பதிவாகி இருக்கக் கூடிய, சில செய்திகளை அவர் பதிவு செய்து கொண்டு இருக்கிறார். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அமைச்சர் எழுந்து மறுக்கட்டும். அல்லது இந்த ஆட்சியில் நடைபெறுகின்ற சில தவறுகளை சுட்டிக்காட்டும் நேரத்தில் அதை மறுக்கும் அதிகாரம், உரிமை, வாய்ப்பு அமைச்சருக்கு உள்ளது.

எனவே, எங்கள் ஆட்சியில் நடைபெற்றதை சொல்லிக் கொண்டு இருக்கின்றபோது, ”இதையெல்லாம் சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை, உங்கள் தலைவருக்கு தகுதி இல்லை” என்று சொல்வது முறையல்ல. எங்கள் தலைவருக்கு தகுதியில்லை என்று சொல்லும் தகுதி அவருக்கு உண்டா என்பதுதான் என்னுடைய கேள்வி.

இன்றைய மீன்வளத்துறை அமைச்சர் இந்த அவைக்கு புதிய உறுப்பினர் அல்ல. ஏற்கெனவே இந்த சட்டசபையில் சட்டத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். பல துறைகளின் அமைச்சராக இருந்திருக்கிறார். ஏன் சபாநாயகர் பொறுப்பில் இருந்து இந்த அவையை வழி நடத்தியிருக்கிறார். இப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். எனவே, அவரிடத்தில் இருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தயவுகூர்ந்து இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை” என்றார் ஸ்டாலின்.