கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.7½ கோடியில் புதிய அலுவலக கட்டிடம்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.7½
கோடியில் புதிய அலுவலக கட்டிடம்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
கோவை, டிச. 2


வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில், ரூ.7.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து, பணியாளர்கள் அறை, கூட்ட அரங்கு மற்றும் அனைத்து அறைகளையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி கமிஷ்னரும் தனிஅலுவலருமான ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை வகித்தார். துணை கமிஷ்னர் ச.பிரசன்னா ராமசாமி வரவேற்று பேசினார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கோவை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான ஆணைகளை 37 பேருக்கு அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது,
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில், ரூ.7.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி கமிஷ்னர், மண்டலத் தலைவர், கூட்ட அரங்கு, உதவி நிர்வாகப் பொறியாளர், உதவி நகரமைப்பு அலுவலர், நிர்வாக அலுவலர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வருவாய் அலுவலர், இளம் பொறியாளர் பிரிவு, மண்டல நில அளவையர் அறை, தணிக்கைப் பிரிவு, வரிவசூல் பிரிவு, பொதுப் பிரிவு, பதிவறை, கணினி அறை, வரி வசூல் மையம் மற்றும் நவீன அடிப்படை வசதிகள் கொண்ட கழிப்பிடம் ஆகியவற்றுடன் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 18,881 சதுரடி பரப்பளவில் (தரைதளம் 10,228 சதுரடி, முதல் தளம் 8653 சதுரடி) அலுவலக கட்டிடம் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் பொதுமக்கள் அமர்ந்து வரிசெலுத்துவதற்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது.

ரூ.395.41 கோடி மதிப்பில் குறிச்சி, குனியமுத்தூர், துடியலூர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி ஆகிய இடங்களில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.3 கோடி மதிப்பில் குனியமுத்தூர் பகுதியில் சிறுவாணியிலிருந்து குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியும், ரூ.24.80 கோடி மதிப்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் மற்று ம் புட்டுவிக்கி சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.11.80 கோடி மதிப்பில் புட்டுவிக்கி சாலை இணைப்பில் தடுப்புச்சுவர் மற்றும் தார்சாலை அமைக்கும் பணியும் முடிவுற்றுள்ளன. இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
விழாவில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், மகேஷ் கனகராஜ், ம.செல்வன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, உதவி கமிஷ்னர் டி.ஆர்.ரவி நன்றி கூறினார்.

Skip to toolbar