விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் விருப்பம

கோவை
”விவசாயத்தை மற்ற எல்லா தொழில்களை காட்டிலும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்தார்.
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 6-ம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் தலைவர் குமார், இயக்குநர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இந்நிறுவனம் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.11.95 கோடி ஆண்டு வருமானம் (Annual turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் சிறு விவசாயிகளின் வேளாண் வணிக கூட்டமைப்பு (Small farmer’s agribusiness consortium) அதிக வருமானம் ஈட்டும் உழவன் உற்பத்தியாளர் பட்டியலில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் முதல் 15 இடங்களுக்குள்ளும் வந்துள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவளிக்கும் ஈஷாவுக்கும் அதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கும் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பிற்பகலில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லுசாமி, நல்லறம் பவுண்டேசன் தலைவர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, விவசாயிகள் தங்களின் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு 1 லட்சம் மரக் கன்றுகளை தாங்களே உற்பத்தி செய்து தருவதாக சத்குருவிடம் உறுதி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:*
நம் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறார்கள். இந்ந சூழலிலும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக செயல் செய்து இருக்கிறார்கள். இதை எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. ஆனால், சமாதானம் அளிக்கவில்லை.
ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைந்தது போதாது. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக, ஒரே பகுதியில் அடுத்தடுத்து நிலம் வைத்துள்ள விவசாயிகளை ஒன்றிணைக்க வேண்டும். அப்படி செய்தால் 3 அல்லது 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை 8 முதல் 10 மடங்கு அதிகரிக்க முடியும்.
விவசாயிகள் தனித் தனியாக விவசாயம் செய்வதால், வேலி அமைப்பதற்கான, மின்சார செலவு, போர் போடும் செலவு, நீர் பாய்ச்சும் செலவு என பல செலவுகள் அதிகமாக உள்ளன.
விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த செலவுகளை பெருமளவு குறைக்க முடியும். விவசாயத்தை மற்ற எல்லா தொழில்களை காட்டிலும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் வாழும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்யும் திறமை அவர்களின் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களை கட்டுப்படுத்த கூடாது. தற்போது வெங்காயத்தின் விலை 100 ரூபாயாக உயர்ந்துவிட்டதால் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இதனால், விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். பல வருடங்களாக போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள் ஒரு ஆண்டில் நல்ல லாபம் பார்த்துவிட்டு போகட்டுமே. வெங்காயத்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.
நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உணவு பற்றாகுறை ஏற்படாமல் இருக்க சில சட்டங்கள் இயற்றினார்கள். ஆனால், அந்த நிலை இப்போது மாறிவிட்டது. ஆனால், இன்னும் அந்த சட்டங்களை அமலில் வைத்து இருக்கிறார்கள். மற்ற துறையினர்களுக்கு இருப்பது போன்ற அனைத்து உரிமைகளும், அதிகாரங்களும் விவசாயிகளுக்கும் இருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
இது மன்னராட்சி காலம் கிடையாது. இது ஜனநாயகம். இப்போது, ஜனங்கள் தான் நாயகர்கள். விவசாயிகள் உங்களுக்கு என்ன உதவிகள் தேவை என தீர்மானித்து அரசாங்களுக்கு கடிதம் எழுதுங்கள். 10,000 விவசாயிகள் கடிதம் எழுதினால் அரசாங்கங்களால் எப்படி எதுவும் செய்யாமல் இருக்க முடியும்.
இவ்வாறு சத்குரு பேசினார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “காவேரி கூக்குரல் இயக்கத்திற்காக கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகளில் கொள்கை அளவிலான பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடக வனத்துறை அடுத்த ஆண்டு 73 லட்சம் மரக் கன்றுகளை வழங்க சம்மதித்துள்ளது. அதேபோல், அதற்கடுத்த 2 ஆண்டுகளில் முறையே 2 கோடி மரக் கன்றுகளும், 8 கோடி மரக் கன்றுகளும் உற்பத்தி செய்து தர சம்மதித்துள்ளது. இதேபோல், தமிழக வனத் துறையுடனும் மரக் கன்றுகள் வழங்குமாறு கோரிக்கை வைக்க உள்ளோம்.
ஐ.நாவின் பாலைவனமாதலை தடுப்பதற்கான அமைப்பு ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவளித்து தேவையான உதவிகள் செய்வதற்கும் முன்வந்துள்ளது.” என்று சத்குரு தெரிவித்தார்.
முன்னதாக, காவேரி கூக்குரல் இயக்க வல்லுனர்கள் வேளாண் காடு வளர்ப்பு குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வாழ்த்து செய்திகள் வீடியோவாக ஒளிப்பரப்பப்பட்டது.

Skip to toolbar