கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக காளிராஜ் நியமனம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக காளிராஜ் நியமனம்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு
சென்னை, அக்.17-
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் பி.காளிராஜை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக கவர்னரும், கோவை பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி.காளிராஜை நியமனம் செய்துள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு இப் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றுவார்.பேராசிரியர் காளிராஜ் 31 ஆண்டுகள் ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்றவர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்ப மையத்தின் ஐசிஎம்ஆர் மருத்துவ விஞ்ஞானியாக உள்ளார். அவர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் உயிர் தொழில்நுட்ப துறையின் தலைவ ராகவும், சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவின் மேரிலேண்ட்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திலும், லண்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இதுவரை இவர் 69 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டதோடு, 42 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் பி.எஸ்.ஆர். ஆசிரியர் விருதும், கடந்த 2013-ம் ஆண்டு இந்திய உயிர் தொழில்நுட்ப சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை நிருபர் ராஜ்குமார்

V. #BALAMURUGAN #9381811222

AD

Skip to toolbar