கேஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

கேஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
கருவிலேயே குழந்தையின் எடையை கணிக்க ‘கேஜி ஹரிசந்திரா’ புதிய விதிமுறை அறிமுகம்
புதிய செயலியை முதல்வர் துவக்கி வைப்பார் : டாக்டர் பக்தவத்சலம் தகவல்
கோவை, செப். 27
கேஜி மருத்துவமனை மருத்துவர்கள் குழு சார்பில், வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடையினை கண்டறிய, ‘கேஜி ஹரிசந்திரா’ எனும் புதிய விதிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை கேஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் கொண்ட குழு பாதுகாப்பான பிரசவத்துக்கு குழந்தையின் எடையை கணிக்கும் விதிமுறையை கண்டறிந்துள்ளது. அதற்கு, ‘கேஜி ஹரிச்சந்திரா’ என்ற பெயரிடப்பட்டு உள்ளது.
இதற்கான அறிமுக விழா மருத்துவமனையில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. கேஜி மருத்துவமனையின் தலைவர் ஜி.பக்தவத்சலம் தலைமை தாங்கினார். ‘கேஜி ஹரிச்சந்திரா’ எனும் புதிய விதிமுறையை, கோவை விமன்ஸ் சென்டர் மருத்துவமனையின் தலைவர் மிருதுபஷினி அறிமுகம் செய்தார். விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை டாக்டர் பக்தவச்சலம் வெளியிட டாக்டர் மிருதுபஷினி பெற்று கொண்டார்.
இந்த விதிமுறைகளை கண்டறியும் வகையில், மருத்துவமனையைச் சேர்ந்த முதன்மை பிரசவ சிறப்பு நிபுணர் சந்திரகலா, துணை மருத்துவர் ஹரிணி, கோவை ஐஎஸ்ஐ நிறுவனத்தின் அதிகாரி ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தினை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்றும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கி பேசினர்.
இது குறித்து டாக்டர் சந்திரகலா மாறன் கூறுகையில், ஒரு குழந்தையின் சுகபிரசவத்துக்கு அதன் எடை 2500 கிராம் முதல் 3100 கிராம் வரை இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி படி உள்ளது. நமது நாட்டில் 7% குழந்தைகள் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் பிறக்கிறது. மேலும், குழந்தையின் உடல் எடையை கணிக்க பல பரிசோதனை இருந்தாலும் குழந்தை பிறந்த பின்பு 100% நாம் கணக்கிடும் எடை இருப்பதில்லை.
எனவே இக்குறையை போக்க எங்களது மருத்துவ குழு புதிய விதிமுறைகளை கண்டுள்ளது. இந்த விதி முறை மூலம், பிறக்கும் குழந்தையின் எடை 250 கிராம் மட்டுமே வித்தியாசம் இருக்கும். இதனால் குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறப்பது சாத்தியப்படும்.
இந்த விதி முறையின் மூலம் ஒருபெண் தாய்மை அடைவதற்கு முன்பு உள்ள எடை முதல் 37 வாரங்கள் வரை உள்ள எடை வரை ஆராய்ந்து, வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடையினை எந்த ஒரு கருவியின் உதவியும் இல்லாமல் கூற முடியும் என்று கூறினார்.
விழாவில் டாக்டர் ஜி.பக்தவத்சலம் பேசுகையில், பிரசவ காலத்தில் பெண்கள் படும் வேதனை மறு பிறவிக்கு ஒப்பானது. ஒரு பிரசவத்தில் முக்கிய பங்காற்றுவது குழந்தையின் தன்மையாகும். அதில் குறிப்பிடதக்கது அக்குழந்தையின் எடை. எனவே எந்த ஒரு கருவியின் மூலம் குழந்தையின் எடை, உயரம் கணக்கிட்டு கூறினாலும், அது 100% முழுமையாக இருப்பதில்லை. எனவே கருவியின் துணை இல்லாமல் புதிய விதிமுறையினை உருவாக்க எங்களது மருத்துவமனையினை சார்ந்த குழு ஆராய்ச்சி செய்தது. இந்த ஆராய்ச்சி 500க்கும் மேற்பட்ட தாய்மை அடைந்த பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். அந்த புதிய விதிமுறைக்கு ‘கேஜி ஹரிசந்திரா’ என்று பெயர் சூட்டியுள்ளோம்.
இந்த புதிய விதிமுறையினை செயலி மூலம் உருவாக்கி உள்ளோம். இன்று முதல் நவம்பர் வரை, ஒவ்வொரு பெண்ணின் எடையினை வாரந்தோறும் கணக்கிட்டு மீண்டும் உறுதி செய்ய உள்ளோம். இந்த புதிய செயலியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர் என்று கூறினார்.

AD

Skip to toolbar