அதிக மரங்களை நட்ட மனிதர் சத்குருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டினார்

இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் சத்குரு:
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்
கோவை, செப். 18
இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் நம் சத்குரு என்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சத்குருவுக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார்.
இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலகாவேரி முதல் திருவாரூர் வழியாக சென்னை வரை சத்குரு தோராயமாக 3,500 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இப்பேரணி கடந்த 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தநிலையில், காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக களமிறங்கியுள்ள சத்குருவுக்கு கோவையின் முக்கிய பிரமுகர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கி பேசினார்.
சாண்ட்பிட்ஸ் பவுண்டரிஸ் தலைவர் ஏ.வி.வரதராஜன், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை மாவட்ட தலைவர் லட்சுமிநாராயணசாமி, கொடிசியா தலைவர் இரா.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், கங்கா மருத்துவனையின் இயக்குநர் ராஜசேகர் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விழாவில் பேசியதாவது: இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் நம் சத்குரு தான். அவர் தொடங்கியுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்தால் காவேரி நதி புத்துயிர் பெறும். அவருடைய ஈஷா யோகா மையம் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை மூன்றரை கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஈஷா செய்து வருவதை நான் நேரில் பார்த்து வருகிறேன். சத்குரு நம் மாவட்டத்தில் இருப்பது நமக்கு பெருமை. நம் மாநிலத்துக்கு பெருமை. காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தேவைப்படும் மரங்களை உள்ளாட்சி துறை வழங்க தயாராக உள்ளோம். அவருடைய பணிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் சத்குரு பேசுகையில், ”12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வரும் வரலாறு நம் தென்னிந்தியாவுக்கு உள்ளது. தமிழ் கலாச்சாரம் விவசாயிகளால் வளர்ந்த கலாச்சாரம். அரசர்களாலோ, மேதைகளாலோ இந்த கலாச்சாரம் வளரவில்லை. ஆனால், இப்போது, வெறும் 2% விவசாயிகள் மட்டும் தங்களின் குழந்தைகள் விவசாயம் செய்வதை விரும்புகின்றனர். இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு யார் உணவு அளிப்பார்கள்? விவசாயத்தை லாபகரமானதாக மாற்றாவிட்டால் யாரும் அதில் ஈடுபட விரும்பமாட்டார்கள்” என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சத்குரு பேசுகையில், ”காவேரி கூக்குரல் இயக்க பயணத்தின் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்த கட்டமாக, காவேரி கூக்குரல் இயக்கத்துக்காக கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சர்களை நாளை சந்தித்து பேச உள்ளேன். ஒவ்வொரு தாலுகாவிலும் 250 முதல் 500 விவசாயிகளை வேளாண் காடு முறைக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக, லி மெரிடியன் ஓட்டலில் இருந்து கொடிசியா வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் சத்குருவுடன் ஏராளமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, கொடிசியா, சிபாகா, கிரெடாய், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், சிறுவாணி விழுதுகள், கவுசிகா நதி பாதுகாப்பு இயக்கம், வனம் அறக்கட்டளை, ராக் உட்பட 35-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் இணைந்து செய்து இருந்தன.

V. #BALAMURUGAN #9381811222

Skip to toolbar