செல்போன் திருட்டில் காதல்ஜோடி

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் பிரசன்னா லிப்ஷா என்பவர் தேனாம்பேட்டையில் காலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றிருக்கின்றனர். அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் பெண் என்றும், வாகனத்தை ஓட்டியவருக்கு வயது 25 இருக்கும் என்றும் பிரசன்ன லிப்ஷா காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது ஜோடியாக வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

விசாரணையில் சூளைமேட்டைச் சேர்ந்த ராஜூ என்பவரையும், தாம்பரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஸ்வாதி என்ற பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் காதலர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் ராஜூ மீது ஏற்கெனவே இருசக்கர வாகனம் திருடிய வழக்கு வடபழனி காவல்நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதோடு கடந்த சனிக்கிழமை அன்று மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடியிருப்பதும், அதில் சென்று கிண்டியிலும், தேனாம்பேட்டையிலும் இரு செல்போன்களை வழிப்பறி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இரு செல்போன்களையும் பர்மா பஜாரில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்றதாக ராஜூ தெரிவித்துள்ளார்.

Arjunatv.in

V.#BALAMURUGAN

9381811222

Skip to toolbar