பிளான்ட்டை மூட வலியுறுத்தி, பிளான்ட்டை முற்றுகை

மன்னார்குடி: கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பிளான்ட்டை மூட வலியுறுத்தி, பிளான்ட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திலும் பெண்கள் ஒப்பாரி வைத்தும் கும்மியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஓஎன்ஜிசி சார்பில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகள் துவங்கின. தங்கள் பகுதியில் புதிய கிணறு அமைக்க கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சுமார் 5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த பிளாண்டில் ராட்சத இயந்திரங்கள் மூலம் பூமிக்கடியில் சுமார் 3500 மீட்டர் ஆழத்திற்கு துளையிடும் பணிகள் துவங்கின. 3 மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு இந்த கிணறு மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் துவங்கும் என ஓஎன்ஜிசி சார்பில் திட்டமிடப் பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஓஎன்ஜிசி நிர்வாகம் எண்ணெய் எடுப்பதற்காக கிணறு அமைக்கவில்லை, ஹைட்ரோ கார்பன் எடுக்கவே புதிய பிளான்ட் அமைக்கப்படுவதாக அச்சம் தெரிவித்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த பிளான்ட்டை உடனே மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராடும் மக்கள் மீது பொய் வழக்கு போடுவதை கை விடக் கோரியும் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் புதிதாக ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிளான்ட்டை முற்றுகையிட்டு 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் சோழங்கநல்லூர், சபாபதிபுரம், கீழப்புழுதிக்குடி, மேலப்புழுதிக்குடி, ஈசனகுடி, சோமாசி, குமாரமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் பங்கேற்றனர்.

V.#BALAMURUGAN

9381811222

Arjunatv.in

Skip to toolbar