இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார், (Arjuna TV)

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழியும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், சுமார் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி மாபெரும் வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கனிமொழியின் வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்தன. அவரது வேட்புமனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. கனிமொழி தன் கணவர், மகன் ஆகியோர் சிங்கப்பூர் பிரஜைகள் என்றும், அவர்களது வருமான விவரங்கள் குறிப்பிடத் தேவையில்லை என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு வழங்கியுள்ள குடிமக்கள் பதிவுச்சான்றிதழை வேட்புமனுவுடன் இணைக்கவில்லை. அதனால், கனிமொழியின் வேட்புமனு முழுவதும் குறைபாடுடன் இருந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழியின் வேட்புமனு குறித்து எனது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவை நிராகரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவற்றை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை.

மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது, கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் ‘வைரலாக’ பரவியது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்தும், எந்த பதிலும் இல்லை.

கணவன், மகன் ஆகியோரது வருமானத்தை மறைத்தது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அதற்கும் எந்த தகவலும் இல்லை. எனவே, கனிமொழியின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதேபோல, தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்துள்ளார்.

அதில், ‘ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

V.BALAMURUGAN

Leave a Reply

You may have missed

Skip to toolbar