தேசிய நீரியல் மேலாண்மைத் திட்டம்

தேசிய நீரியல் மேலாண்மைத் திட்டம்

 

புதுதில்லி, 06 ஏப்ரல், 2016

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை தேசிய நீரியல் மேலாண்மை திட்டத்தை அமலாக்குவதற்கான தனது ஒப்புதலை வழங்கியது. மொத்தம் ரூ. 3679.7674 கோடி நிதி முதலீட்டிலான இத்திட்டம் முழுமையும் மத்திய அரசின் திட்டமாகவே இருக்கும். இதில் தேசிய நீரியல் மேலாண்மை திட்டத்திற்கென ரூ. 3,640 கோடியும், இரண்டு கட்டங்களில் உருவாகவுள்ள தேசிய நீர் தகவல் மையத்திற்கு ரூ. 39.7674 கோடியும் செலவிடப்படும். இந்தத் திட்டத்தில் உள்ளடங்கிய தேசிய நீர் தகவல் மையமானது சுயேச்சையானதொரு அமைப்பாக, நீர்வள ஆதாரங்கள், ஆறு வளர்ச்சி மற்றும் கங்கை ஆற்று புத்துயிர்ச்சி ஆகியவற்றுக்கான அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக இருக்கும்.

 

இந்த தேசிய நீரியல் மேலாண்மை திட்டமானது நீரியல் மற்றும் வானியல் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்க உதவும். இந்த தகவல்கள் சேமிக்கப்பட்டு, அந்தந்த நேரத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதோடு, நாட்டிலுள்ள எந்தவொரு பயனரும் மாநில/மாவட்ட/கிராம அளவிலேயே எளிதாக அணுக வழியேற்படும். இதற்கு முந்தைய நீரியல் குறித்த திட்டங்கள் அனைத்தும் 13 மாநிலங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டதெனில், இந்த திட்டமானது நாடு முழுவதையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது.

 

இந்த முன்வரைவின் அம்சங்களாவன:

 

அ) ஒரே இடத்தை அடிப்படையாகக் கொண்ட நீரியல்-வானியல் கண்காணிப்பு முறை மற்றும் நீரியல் புள்ளிவிவர சேகரிப்பு முறை.

ஆ) தேசிய நீர் தகவல் மையத்தை உருவாக்குவது.

இ) நீர்வள ஆதாரங்கள் செயல்பாடு மற்றும் மேலாண்மைக்கான முறை.

ஈ) நீர்வள ஆதாரங்களுக்கான நிறுவனங்கள் மற்றும் திறன் வளர்ப்பு ஏற்பாடுகள்.

 

இத்திட்டத்தின் விளைவாக கீழ்கண்ட விஷயங்களில் மேம்பாடு காணலாம்:

1. தேசிய நீர் தகவல் மையத்தின் மூலம் புள்ளிவிவர சேமிப்பு, பரிமாற்றம், ஆய்வு மற்றும் தகவல் பரப்புரை ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.

2. வெள்ளம் குறித்த அபாய அறிவிப்பினை தற்போதைய ஒரு நாளுக்கு முன்பாக என்பதற்கு மாறாக குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்பாக வெளியிடுதல்.

3. இயற்கையாகவே வெள்ள நீர் தேங்கும் பகுதிகளை குறிப்பாக கண்டறிந்து அவற்றை பேரிடர் மேலாண்மை அமைப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுதல்.

4. ஆற்றோட்ட பகுதிகளில் காணப்படும் மேல்மட்ட மற்றும் தரையடி நீரின் அளவை கணக்கிட்டு, அதை சிறப்பான வகையில் நிர்வகிக்கவும், பிரதமரின் அனைத்து கிராமங்களுக்கான பாசன வசதித் திட்டம் மற்றும் அதைப் போன்ற இதர திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்வது.

5. பருவமழைக் காலங்களில் கிடைக்கவுள்ள நீர் பற்றிய முன்னறிவிப்பு, வறட்சி மேலாண்மை, மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு போன்ற வழிவகைகளின் மூலம் நீர்த்தேக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

6. மேல்மட்ட மற்றும் தரைக்கு அடியிலான நீருக்கான கட்டமைப்புகள், நீர்மின் அமைப்புகள், நதிகள் இணைப்பு, செயல்திறன் மிக்க நகரங்கள் ஆகியவற்றிற்கான வடிவமைப்புகளை உருவாக்குவது.

7. எண்ணியல் திறன் கொண்ட இந்தியா என்ற நோக்கத்தை நிறைவேற்றுவது.

8. மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை: அறிவியல்பூர்வமான புள்ளிவிவர சேகரிப்பு, நாட்டின் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கக்கூடிய நீரின் அளவு பற்றிய தகவலை பரப்புவது, தேசிய நீர் தகவல் மையத்தை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் நீர் மேலாண்மையை மேற்கொள்வது என்பதையே இத்திட்டம் முடிவான நோக்கமாகக் கொண்டுள்ளது. வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பிற்கென தானியங்கி முறைகளை அமைப்பது என்பது நீரின் மூலமான பேரழிவுகளைக் குறைப்பதும் அதன் மூலம் இதனால் பாதிக்கப்படப் போகிற மக்களுக்கு உதவுவதே அதன் இறுதி நோக்கமாக அமையும். மக்களையும் விவசாயிகளையும் மையமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீர் குறித்த தகவலானது ஒரு பகுதியில் நீர் கிடைப்பதற்கான வாய்ப்பை எடுத்துக் கூறுவதாக, அதன் மூலம் விவசாயிகள் பயிரிடுவதற்கும் இதர விவசாய வேலைகளுக்கும் திட்டமிடவும் உதவி செய்யும். இத்திட்டத்தின் மூலம் அறிவியல் பூர்வமான முயற்சிகளுக்குப் பெயர்போன நாடுகளிடையே ஓரிடத்தை இந்தியா பெற முடியும்.

 

இத்திட்டத்திற்கான மொத்த நிதிஒதுக்கீடான ரூ. 3679.7674 கோடியில், தேசிய நீர் ஆய்வுத் திட்டத்திற்கென ரூ. 3,640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் தகவல் மையத்திற்கென ரூ. 39.7674 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதமான ரூ. 1839.8837 கோடி உலக வங்கியிடமிருந்து பெறப்படும் கடனாக அமையும். இந்தக் கடனை மத்திய அரசு திருப்பித் தந்துவிடும். மீதமுள்ள ரூ. 1839.8837 கோடியானது மத்திய அரசின் உதவியாக பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம் பெறப்படும். மாநிலங்களுக்கும், இது தொடர்பான மத்திய அரசின் நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை முழுவதுமே மானியமாக வழங்கப்படும் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

 

திட்டத்தின் தாக்கம் பற்றிய விளக்கம்:

 

அ) வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பை உரிய நேரத்தில் செய்வது மற்றும் நீர்த்தேக்க செயல்பாடுகள் ஆகிய முயற்சிகளின் விளைவாக நீர்த்தேக்கத்தின் கதவுகள் திடீரென திறக்கப்பட்டு அதற்குக் கீழேயுள்ள பகுதிகளை மூழ்கடிப்பது தவிர்க்கப்படும்.

 

ஆ) நீர் மற்றும் வானியல் புள்ளிவிவரங்களை அலசி ஆராய்ந்து நிர்வகிப்பதன் மூலம் ஆற்றோட்டப் பகுதிகளுக்கான மேலாண்மையை மேற்கொள்வதன் விளைவாக ஒருங்கிணைந்ததொரு நீர்வள ஆதார மேலாண்மைக்கு வழிவகுக்கும். மேல்பகுதி மற்றும் தரைக்கு அடியிலுள்ள நீரின் அளவை மதிப்பீடு செய்வதன் மூலம் நீர்வள ஆதாரங்களுக்கான மதிப்பீட்டை உருவாக்கவும், நீர்வள ஆதாரத்திற்கான திட்டமிடலுக்கும் அதைப் பகிர்ந்து அளிப்பதற்கான முன்னுரிமை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதை பாசனத்திற்காகப் பயன்படுத்தவும் உதவும்.

 

இ) தரைக்கு அடியில் உள்ள நீரின் நிலை குறித்த தகவல்களை உரிய நேரத்தில் செயல் திறன் மிக்க அடிப்படையில் விவசாயிகளுக்கு தெரிவிப்பதன் விளைவாக அவர்கள் தங்களது பயிர் குறித்த திட்டமிடலை மேற்கொள்ள உதவி செய்யும்.

 

ஈ) தண்ணீரை சிறந்த முறையிலும் சம அளவிலும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில், இத்திட்டம் உதவி செய்யும்.

 

உ) தண்ணீரின் தரம் குறித்த தகவல்களைப் பெறவும் இது உதவு செய்யும்.

 

பின்னணி:

 

உரிய நேரத்தில், நம்பிக்கையான வகையில் நீர்வள ஆதாரங்கள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிப்பது, சேமிப்பது, ஆய்வு செய்வது, நிர்வகிப்பது ஆகியவற்றிற்கான ஒரு முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே இந்த தேசிய நீரியல் மேலாண்மைக்கான திட்டம் அமைகிறது. நீர்வள ஆதாரங்கள் குறித்த மதிப்பீடு, வெள்ள மேலாண்மை, நீர்த்தேக்க செயல்பாடுகள், வறட்சி மேலாண்மை, போன்றவற்றிற்கான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும் முறைகளின் மூலம் தெளிவான முடிவுகளை மேற்கொள்வதற்கான கருவிகள், முறைகள் ஆகியவற்றை இது வழங்கும். இது குறித்த தகவல் முறைகளை பயன்படுத்துவதன் மூலமும், தொலைதூர உணர்வு போன்ற நவீன தொழில்நுட்பத்தை மேற்கொள்வதன் மூலமும் நீர்வள ஆதாரங்களுக்கான மேலாண்மையில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் அளவில் திறன்களை உருவாக்கவும் இந்த தேசிய நீரியல் மேலாண்மைத் திட்டம் முனைகிறது.

 

ஆற்றோட்ட அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் நீர்வள ஆதாரங்கள் மற்றும் ஆற்று மேம்பாடு மற்றும் கங்கையாறு புத்துயிர்ப்பிற்கான மத்திய அமைச்சகம் நாட்டின் நீர்வள ஆதாரங்களின் மேலாண்மையில் ஒரு தலைகீழ் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. மிக வேகமாக குறைந்து கொண்டே போகும் இந்த ஆதாரவளத்தை முறையாகப் பங்கீடு செய்யவும் அதற்கு உரிய முன்னுரிமை தரவும், நாட்டின் நீர்வள ஆதாரங்களை திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள, நிர்வகிக்கத் தேவையான புள்ளிவிவரங்கள், ஆதாரவளங்கள் குறித்த மதிப்பீடு, முடிவுகளை நிறைவேற்றுவதற்கான முறைகள் போன்றவை மிக முக்கியமான முன் தேவைகள் ஆகும்.

AD

Skip to toolbar